Thiruvasagam Lyrics in Tamil

Manikkavasagar’s Thiruvasagam Lyrics in Tamil from Lord Shivan Songs. Sivapuranam or Thiruvasagam Lyrics penned in Tamil by Manikkavasagar.

Thiruvasagam Lyrics in Tamil

தொல்லை இரும்பிறவிச்
சூழும் தளை நீக்கி
அல்லல் அறுத்து
ஆனந்தம் ஆக்கியதே
எல்லை மருவா நெறியளிக்கும்
வாதவூர் எங்கோன்
திருவாசகம் என்னும் தேன்

நமச்சிவாய வாழ்க
நாதன்தாள் வாழ்க
இமைப் பொழுதும் என் நெஞ்சில்
நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட
குருமணிதன் தாள் வாழ்க
ஆகமம் ஆகி நின்று
அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன்
இறைவன் அடி வாழ்க

வேகம் கெடுத்து ஆண்ட
வேந்தன் அடி வெல்க
பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் தன்
பெய்கழல்கள் வெல்க
புறத்தார்க்குச் சேயோன் தன்
பூங்கழல்கள் வெல்க
கரம் குவிவார் உள்மகிழும்
கோன் கழல்கள் வெல்க
சிரம் குவிவார் ஓங்குவிக்கும்
சீரோன் குழல் வெல்க

ஈசன் அடி போற்றி
எந்தை அடி போற்றி
தேசன் அடி போற்றி
சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற
நிமலன் அடி போற்றி
மாயப் பிறப்பு அறுக்கும்
மன்னன் அடி போற்றி
சீர் ஆர் பெருந்துறை
நம்தேவன் அடி போற்றி
ஆராத இன்பம் அருளும்
மலை போற்றி

சிவன் அவன் என் சிந்தையுள்
நின்ற அதனால்
அவன் அருளாலே
அவன் தாள் வணங்கிச்
சிந்தை மகிழச்
சிவ புராணம் தன்னை
முந்தை வினை முழுதும்
ஓய உரைப்பன் யான்

கண் நுதலான் தன் கருணைக்
கண் காட்ட வந்து எய்தி
எண்ணுதற்கு எட்டா
எழில் ஆர் கழல் இறைஞ்சி
விண் நிறைந்து மண் நிறைந்து
மிக்காய் விளங்கு ஒளியாய்
எண் நிறைந்து எல்லை இலாதானே
நின் பெரும் சீர்
பொல்லா வினையேன்
புகழும் ஆறு ஒன்று அறியேன்

புல்லாகிப் பூடாய்ப்
புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப்
பறவையாய் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப்
பேய்யாய்க் கணங்களாய்
வல்லசுரர் ஆகி
முனிவராய் தேவராய்ச்
செல்லா அ நின்ற
இத்தாவர சங்கமத்துள்

எல்லாப் பிறப்பும் பிறந்து
இளைத்தேன் எம்பெருமான்
மெய்யே உன் பொன் அடிகள்
கண்டு இன்று வீடு உற்றே
உய்ய என் உள்ளத்துள்
ஓங்காரம் ஆய் நின்ற
மெய்யா விமலா
விடைப்பாகா வேதங்கள்
ஐயா என ஓங்கி ஆழ்ந்து
அகன்ற நுண்ணியனே

வெய்யாய் தணியாய்
இயமானன் ஆம் விமலா
பொய் ஆயின எல்லாம்
போய் அகல வந்து அருளி
மெய்ஞானம் ஆகி
மிளிர்கின்ற மெய்சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன்
இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை
அகல் விக்கும் நல் அறிவே

ஆக்கம் அளவு இறுதி இல்லாய்
அனைத்து உலகும்
ஆக்குவாய் காப்பாய்
அழிப்பாய் அருள் தருவாய்
போக்குவாய் என்னைப்
புகுவிப்பாய் நின்தொழும்பின்
நாற்றத்தின் நேரியாய்
சேயாய் நணியானே
மாற்றம் மனம் கழிய
நின்ற மறையோனே

கறந்த பால் கன்னலோடு
நெய் கலந்தாற் போலச்
சிறந்து அடியார் சிந்தனையுள்
தேன் ஊறி நின்று
பிறந்த பிறப்பு அறுக்கும்
எங்கள் பெருமான்
நிறங்கள் ஓர் ஐந்துடையாய்
விண்ணோர்கள் ஏத்த
மறைந்து இருந்தாய் எம்பெருமான்
வல்வினையேன் தன்னை

மறைந்திட மூடிய
மாய இருளை
அறம்பாவம் என்னும்
அரும் கயிற்றால் கட்டிப்
புறம்தோல் போர்த்து
எங்கும் புழு அழுக்கு மூடி
மலம் சோரும்
ஒன்பது வாயில் குடிலை
மலங்கப் புலன் ஐந்தும்
வஞ்சனையைச் செய்ய

விலங்கு மனத்தால்
விமலா உனக்குக்
கலந்த அன்பு ஆகிக்
கசிந்து உள் உருகும்
நலம் தான் இலாத
சிறியேற்கு நல்கி
நிலம் தன் மேல் வந்து அருளி
நீள் கழல்கள் காட்டி
நாயிற் கடையாய்க்
கிடந்த அடியேற்குத்

தாயிற் சிறந்த
தயா ஆன தத்துவனே
மாசு அற்ற சோதி
மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேன்
ஆர் அமுதே சிவபுரனே
பாசம் ஆம் பற்று அறுத்துப்
பாரிக்கும் ஆரியனே
நேச அருள் புரிந்து
நெஞ்சில் வஞ்சம் கெடப்

பேராது நின்ற பெரும்
கருணைப் பேர் ஆறே
ஆரா அமுதே
அளவு இலாப் பெம்மானே
ஓராதார் உள்ளத்து
ஒளிக்கும் ஒளியானே
நீராய் உருக்கி
என் ஆர் உயிர் ஆய் நின்றானே
இன்பமும் துன்பமும்
இல்லானே உள்ளானே

அன்பருக்கு அன்பனே
யாவையுமாய் அல்லையுமாய்
சோதியனே துன் இருளே
தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடு
ஆகி அல்லானே
ஈர்த்து என்னை ஆட் கொண்ட
எந்தை பெருமானே
கூர்த்த மெய்ஞானத்தால்
கொண்டு உணர்வார் தம் கருத்தின்

நோக்கு அரிய நோக்கே
நுணுக்கு அரிய நுண் உணர்வே
போக்கும் வரவும் புணர்வும்
இலாப் புண்ணியனே
காக்கும் எம் காவலனே
காண்பு அரிய பேர் ஒளியே
ஆற்று இன்ப வெள்ளமே
ஆத்தா மிக்காய் நின்ற
தோற்றச் சுடர் ஒளியாய்ச்
சொல்லாத நுண் உணர்வாய்

மாற்றம் ஆம் வையகத்தின்
வெவ்வேறே வந்து அறிவாம்
தேற்றனே தேற்றத் தெளிவே
என் சிந்தனையுள்
ஊற்றான உண்ணார் அமுதே
உடையானே
வேற்று விகார விடக்குடம்பின்
உட் கிடப்ப
ஆற்றேன் எம் ஐயா
அரனே ஓ என்று என்று

போற்றிப் புகழ்ந்து இருந்து
பொய் கெட்டுமெய் ஆனார்
மீட்டு இங்கு வந்து
வினைப் பிறவி சாராமே
கள்ளப் புலக் குரம்பை
கட்டு அழிக்க வல்லானே
நள் இருளில் நட்டம்
பயின்று ஆடும் நாதனே
தில்லையுள் கூத்தனே
தென் பாண்டி நாட்டானே

அல்லல் பிறவி அறுப்பானே
ஓ என்று
சொல்லற்கு அரியானைச்
சொல்லித் திருவடிக் கீழ்ச்
சொல்லிய பாட்டின்
பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின்
உள்ளார் சிவன் அடிக் கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து

திருச்சிற்றம்பலம்
திருச்சிற்றம்பலம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *