Sotrunai Vedhiyan Lyrics in Tamil from Namasivaya Pathigam in Devaaram. Sotrunai Vedhiyan Lyrics has penned in Tamil by Thirunavukkarasu.
Sotrunai Vedhiyan Lyrics in Tamil
சொற்றுணை வேதியன்
சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி
பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர்
கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது
நமச்சி வாயவே
பூவினுக் கருங்கலம்
பொங்கு தாமரை
ஆவினுக் கருங்கலம்
அரனஞ் சாடுதல்
கோவினுக் கருங்கலங்
கோட்ட மில்லது
நாவினுக் கருங்கலம்
நமச்சி வாயவே
விண்ணுற அடுக்கிய
விறகின் வெவ்வழல்
உண்ணிய புகிலவை
யொன்று மில்லையாம்
பண்ணிய வுலகினிற்
பயின்ற பாவத்தை
நண்ணிநின் றறுப்பது
நமச்சி வாயவே
இடுக்கண்பட் டிருக்கினும்
இரந்தி யாரையும்
விடுக்கிற் பிரானென்று
வினவுவோ மல்லோம்
அடுக்கற்கீழ்க் கிடக்கினு
மருளின் நாமுற்ற
நடுக்கத்தைக் கெடுப்பது
நமச்சி வாயவே
வெந்தநீ றருங்கலம்
விரதி கட்கெலாம்
அந்தணர்க் கருங்கலம்
அருமறை யாறங்கந்
திங்களுக் கருங்கலந்
திகழு நீண்முடி
நங்களுக் கருங்கலம்
நமச்சி வாயவே
சலமிலன் சங்கரன்
சார்ந்த வர்க்கலால்
நலமிலன் நாடொறு
நல்கு வான்நலன்
குலமில ராகிலுங்
குலத்திற் கேற்பதோர்
நலமிகக் கொடுப்பது
நமச்சி வாயவே
வீடினார் உலகினில்
விழுமிய தொண்டர்கள்
கூடினார் அந்நெறி
கூடிச் சென்றலும்
ஓடினே னோடிச்சென்
றுருவங் காண்டலும்
நாடினேன் நாடிற்று
நமச்சி வாயவே
இல்லக விளக்கது
இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது
சோதி யுள்ளது
பல்லக விளக்கது
பலருங் காண்பது
நல்லக விளக்கது
நமச்சி வாயவே
முன்னெறி யாகிய
முதல்வன் முக்கணன்
தன்னெறி யேசர
ணாதல் திண்ணமே
அந்நெறி யேசென்றங்
கடைந்த வர்க்கெலாம்
நன்னெறி யாவது
நமச்சி வாயவே
மாப்பிணை தழுவிய
மாதோர் பாகத்தன்
பூப்பிணை திருந்தடி
பொருந்தக் கைதொழ
நாப்பிணை தழுவிய
நமச்சி வாயப்பத்
தேத்தவல் லார்தமக்
கிடுக்க ணில்லையே