Thiruppavai Pasuram 1 Lyrics in Tamil from Sri Andal Thiruppavai Book. Thiruppavai Pasuram 1 Lyrics has written in Tamil by Andal.
Thiruppavai Pasuram 1 Tamil Lyrics
மார்கழித் திங்கள்
மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர்
போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கும் ஆய்ப்பாடிச்
செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன்
நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி
யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண்
கதிர்மதியம் போல்முகத்தான்
நாராயணனே
நமக்கே பறைதருவான்
பாரோர் புகழப்
படிந்தேலோ ரெம்பாவாய்
பாடலின் பொருள்
அழகிய அணிகலன்களை அணிந்த கன்னியரே! சிறப்பு மிக்க ஆயர்பாடியில் வசிக்கும் செல்வவளமிக்க சிறுமிகளே! மார்கழியில் முழுநிலா ஒளி வீசும் நல்ல நாள் இது. இன்று நாம் நீராடக் கிளம்புவோம். கூர்மையான வேலுடன் நம்மைப் பாதுகாத்து வரும் அரிய தொழிலைச் செய்யும் நந்தகோபன், அழகிய கண்களையுடைய யசோதாபிராட்டி ஆகியோரின் சிங்கம் போன்ற மகனும், கரிய நிறத்தவனும், சிவந்த கண்களை உடையவனும், சூரியனைப் போல் பிரகாசமான முகத்தையுடையவனும், நாராயணனின் அம்சமுமான கண்ணபிரான் நமக்கு அருள் தர காத்திருக்கிறான். அவனை நாம் பாடிப் புகழ்ந்தால் இந்த உலகமே நம்மை வாழ்த்தும்.
பாடலின் விளக்கம்
இந்த பாசுரத்தை ஆண்டாள் வைகுண்டத்தை மனதில் கொண்டு பாடுகிறாள். அதனால் தான் “நாராயணனே பறை தருவான் என்கிறாள். 108 திருப்பதிகளில் 106ஐ பூமியில் காணலாம். 108வது திருப்பதியான வைகுண்டத்தில் தான் நாராயணன் வசிக்கிறார். நாம் செய்யும் புண்ணியத்தைப் பொறுத்தே இந்த திருப்பதியை அடைய முடியும். இந்தப் பாடலைப் பக்தியுடன் படித்து, தர்ம செயல்களை மட்டுமே செய்து வந்தால் நாமும் வைகுண்டத்தை அடைந்து பரந்தாமனுடன் கலந்து விடுவோம்.